நேற்று நடைபெற்ற விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர்களான ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடால், சுவிஸ்ஸைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் மோதினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் முதல் சுற்றை 7-6 என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தி ஃபெடரர் கைப்பற்றினார். அதன் பின் ஆட்டத்தின் போக்கை மாற்ற நினைத்த நடால், இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றினார்.
பின் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிபடுத்திய ஃபெடரர் 6-3, 6-4 என தொடர்ந்து மூன்றாவது, நான்காவது செட் கணக்குகளை கைப்பற்றி நடாலிற்கு அதிர்ச்சி அளித்தார்.
இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் 12ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார் ரோஜர் ஃபெடரர். இவர் கலந்துகொண்ட 11 விம்பிள்டன் தொடர் இறுதிப்போட்டிகளில் 7 முறை மகுடம்சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, 31ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் நபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ரோஜர் ஃபெடரர்.
இந்த போட்டியில் மற்றொரு சாதனையையும் படைத்த ஃபெடரர், விம்பிள்டன் போட்டிகளில் 1398 ஏசஸ்(ACES) புள்ளிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார்.
இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் ரோஜர் ஃபெடரர்
மேலும், வரும் ஞாயிரன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை ரோஜர் ஃபெடரர் எதிர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.