கோவிட்-19 பெருந்தொற்றுக்காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக விம்பிள்டன், லேவர் கோப்பை, பிரஞ்சு ஓபன் போன்ற மிகமுக்கிய டென்னிஸ் தொடர்களும் அடங்கும்.
இந்நிலையில் டென்னிஸ் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் கடைநிலை வீரர்களுக்கு உதவுவதற்காக உலகின் முதல் நிலை வீரர்களான ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகியோருடன் கலந்து பேச்சு வார்த்தை நடத்தியதாக நோவாக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜோகோவிச், 'நான் ஃபெடரர், நடாலுடன் கடந்த சில நாட்களாக பேசினேன். நாங்கள் வருங்கால டென்னிஸ் குறித்த விவாதங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது டென்னிஸின் வருங்காலம் எப்படி இருக்க போகிறது, அதற்கு நாங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி பேசினோம். குறிப்பாக கடைநிலை வீரர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி சிந்தித்தோம்.
மேலும், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பாக தரவரிசைப்பட்டியலில் 200 முதல் 250 வீரர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு வழங்குகிறது. ஆனால், தரவரிசையில் 700 முதல் 1000 வரையில் உள்ள வீரர்களுக்கு கூட்டமைப்பு சார்பாக எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. மேலும் அவர்களுக்கு ஸ்பான்ஸர்கள் கூட இல்லாமல் அவர்களாகவே அனைத்துப் போட்டிகளுக்கான செலவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 250 முதல் 700க்குள் இருக்கும் வீரர்களே டென்னிஸை விட்டு வெளியேறும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.