டென்னிஸ் போட்டியில் நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் நாளை மறுநாள் மெல்போர்னில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரின் பிரதான சுற்றுக்குள் நுழைய தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-7, 2-6 என்ற நேர் செட் கணக்கில் லாட்வியாவின் எர்னஸ்ட் குல்பிஸுடம் தோல்வியடைந்து ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.
இருப்பினும், இந்தத் தொடரில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாவுர், போலாந்தின் கமில் மஜ்சார்க், ஊக்கமருந்து விவகாரம் காரணமாக நிக்கோலஸ் ஜெரி ஆகியோர் வெளியேறியது பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு சாதகமாக அமைந்தது. இந்த அதிருஷ்டத்தால் அவர் தற்போது ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் பிரதான சுற்றுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக நுழைந்துள்ளார். இதன்மூலம், அவர் தொடர்ச்சியாக ஐந்தாவது கிராண்ட்ஸாம் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் ஜப்பானின் தட்சுமோ இடோ உடன் அவர் மோதவுள்ளார். இப்போட்டியில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டாவது சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரும் செர்பியாவின் நட்சத்திர வீரருமான ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்துவார். இதனால், இந்தத் தொடரில் பிரஜ்னேஷ் குணேஸ்வரனின் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:2 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையுடன் கம்பேக் தந்த சானியா மிர்சா