லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் 2017ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணியின் டென்னிஸ் முன்னாள் ஜாம்பவானான ராட் லேவர் நினைவாக நடத்தப்பட்டுவருகின்றது. இத்தொடரில் உலகின் நட்சத்திர வீரர்கள் ஐரோப்பா அணி, உலக அணி என இரு அணிகளாக பங்கேற்கின்றனர்.
இதில் ஐரோப்பா அணியில் நட்சத்திர வீரர்கள் ரஃபேல் நடால், ரோஜர் பெடரர், டாமினிக் தீம், ராபர்டோ பாடிஸ்டா அகுட் ஆகியோரும், உலக அணி சார்பில் ஜான் இஸ்னர், நிக் கிர்ஜியோஸ், ஜேக் சாக் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். இத்தொடரில் இவர்கள் ஒற்றையர் பிரிவில் ஒன்பது போட்டிகளிலும் இரட்டையர் பிரிவில் மூன்று போட்டிகளிலும் விளையாடவுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு லீக் ஆட்டத்தில் ஐரோப்பிய அணி சார்பாக நட்சத்திர வீரர் ரஃபேல் நடாலும் உலக அணி சார்பாக மிலோஸ் ரானிக்கும் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஐரோப்பிய அணி வீரர் ரஃபேல் நடால் 6-3, 7-1 என்ற நேர் செட் கணக்குகளில் உலக அணி வீரர் மிலோஸ் ரானிக்கை வீழ்த்தினார்.
இதையும் படிங்க...!
#USOpen மீண்டும் பட்டத்தைத் தனதாக்கிய நடால்
மற்றொரு ஆட்டத்தில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் ஐரோப்பிய அணிக்காகவும் நட்சத்திர வீரர் நிக் கிர்ஜியோஸ் உலக அணிக்காகவும் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கிர்ஜியோஸ் சாமர்த்தியமாக விளையாடி 7-6 என்ற புள்ளிகணக்கில் பெடரரிடமிருந்து கைப்பற்றினார்.
அதன்பின் சக அணி வீரரான நடாலின் அறிவுரைகளை மனதில் வாங்கிய பெடரர் 7-5, 10-7 என்ற கணக்கில் அடுத்தடுத்து இரண்டு செட்களையும் கைப்பற்றினார். இதன்மூலம் ரோஜர் பெடரர் 6-7, 7-5, 10-7 என்ற செட் கணக்கில் நிக் கிர்ஜியோஸை வீழ்த்தினார்.
இதையும் படிங்க...!
102ஆவது பட்டம் வென்று விம்பிள்டன் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஃபெடரர்!
இதற்கு முன்னதாக தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ஐரோப்பிய அணி சார்பில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உலக அணியின் ஜான் இஸ்னரை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஜான் இஸ்னர் 6-7, 6-4, 10-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் அலெக்சாண்டரை வீழ்த்தி உலக அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
நேற்றைய போட்டியின் மூலம் ஐரோப்பிய அணி ஏழு புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கிறது. உலக அணி ஐந்து புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இத்தொடரை வெற்றிபெற ஒரு அணி தலா 13 புள்ளிகளை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.