நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியனும் செர்பியாவின் நட்சத்திர வீரருமான நோவாக் ஜோகோவிச், ஜெர்மனியைச் சேர்ந்த ஜேன் லெனார்டு ஸ்ட்ருஃப் (Jan Lennard Struff) உடன் மோதினார்.
ஆட்டத்தின் முதல் செட்டில் இரு வீரர்களும் போட்டிபோட்டுக் கொண்டு தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் டை பிரேக்கர் முறையில் ஜோகோவிச் 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் லாவகமாக வென்ற ஜோகோவிச் மூன்றாவது செட்டை 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
900ஆவது வெற்றியை பதிவு செய்த ஜோகோவிச்! அதன்பின் நடந்த நான்காவது செட்டில் சுகாரித்துகொண்டு விளையாடிய ஜோகோவிச் 6-1 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம், ஜோகோவிச் 7-6, 6-2, 2-6,6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று தொடர்ந்து 14ஆவது முறையாக இந்தத் தொடரில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் வெல்லும் 900ஆவது வெற்றி இதுவாகும். இதன்மூலம், ஆடவர் ஒற்றையர் பிரிவில் 900 வெற்றிகளை பதிவு செய்த ஆறாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
"நான் படைத்த அனைத்து சாதனைகளையும் நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால் அதேசமயத்தில் நான் உண்மையிலேயே நேசிக்கும் இந்த விளையாட்டை இந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுவதற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை எப்போதும் நினைத்து பார்க்க முயற்சிக்கிறேன் என இச்சாதனை குறித்து ஜோகோவிச் கூறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர்கள் விவரம்:
- ஜிம்மி கொனார்ஸ் (அமெரிக்கா) -1274 வெற்றிகள்
- ரோஜர் ஃபெடரர் (சுவிட்சர்லாந்து) - 1238 வெற்றிகள்
- இவான் லென்டில் (செக் குடியரசு / அமெரிக்கா) - 1068 வெற்றிகள்
- ரஃபேல் நடால் (ஸ்பெயின்) - 981 வெற்றிகள்
- குய்லர்மோ விலாஸ் (அர்ஜென்டினா) - 949 வெற்றிகள்
- நோவாக் ஜோகோவிச் (செர்பியா) - 900 வெற்றிகள்
இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபன்: இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய ஃபெடரர்!