நடாலை வெளியேற்றிய நிக் கிர்ஜியோஸ்! - tennis
மெக்ஸிகோ: மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் கிர்ஜியோஸிடம் தோல்வியுற்று நடால் பரிதாபமாக வெளியேறினார்.
மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் தொடர் பிப். 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் வீரர் நடாலை எதிர்த்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் விளையாடினார். இதன் முதல் சுற்றை 6-3 என்ற கணக்கில் நட்சத்திர வீரர் நடால் கைப்பற்றினார்.
பின்னர் பயிற்சியாளருடனான ஆலோசனைக்கு பின் களமிறங்கிய நிக் கிர்ஜியோஸ், ரசிகர்களைப் பார்த்து தகாத வார்த்தைகளால் கத்த, பின்னர் நிக்கை கள நடுவர் எச்சரித்தார். அதன் பிறகு தொடங்கிய இரண்டாவது சுற்றில் சுதாரித்துக் கொண்ட கிர்ஜியோஸ் 7-6 க்கு என கைப்பற்றினார். 3-வது சுற்றையும் 7-6 என்ற கணக்கில் கிர்ஜியோஸ் கைப்பற்றி நடாலை வீழ்த்தினார்.
நட்சத்திர வீரர் நடால், 23 வயதேயாகும் கிர்ஜியோசிடம் தோல்வியுற்றது டென்னிஸ் உலகில் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. காலிறுதியில் கிர்ஜியோஸ் சுவிஸ் வீரர் ஸ்டான் வாவ்ரிங்காவுடன் மோதவுள்ளார்.