அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (செப்.14) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் இரண்டு செட்களை அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-2, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி தீம்மிற்கு அதிர்ச்சியளித்தார். அதன் பின்னர் நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய தீம் 6- 4 என்ற கணக்கில் கைப்பற்றி தோல்வியிலிருந்து மீண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற நான்காவது செட்டிற்கான ஆட்டத்தில் அசத்திய தீம் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தினார். வெற்றியைத் தீர்மானிக்கும் ஐந்தாவது செட் ஆட்டத்தில் சம பலத்துடன் மோதிய தீம் - ஸ்வெரவ் ஒருவருக்கொருவர் தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடினர்.
சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் டொமினிக் தீம் இறுதியில் டொமினிக் தீம் 7-6 என்ற கணக்கில் ஐந்தாவது செட்டை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். மேலும் டொமினிக் தீம் வெல்லும் முதல் யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டம் இதுவாகும்.
இதையும் படிங்க:'நான் எப்படி வர வேண்டும் என நினைத்தாரோ, அப்படி இருக்கவே விரும்புகிறேன்' கோப் பிரையன்ட் குறித்து ஒசாகா!