2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், சிலியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் நிக்கோலஸ் ஜார்ரி ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் ஊக்க மருந்து தடுப்புப் பிரிவினர், நிக்கோலஸ் தனது தசை பகுதிகளை வலிமைப்படுத்துவதற்காக லிகாண்ட்ரோல் மற்றும் அனபோலிக் ஸ்டீராய்டுகளை பயன்படுத்தியதை உறுதிப்படுத்தினர். மேலும் இது குறித்து நிக்கோலஸை பதிலளிக்கும்படி உத்தவிட்டிருந்தனர்.
இது குறித்து நிக்கோலஸ் கூறுகையில், தனது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் மாத்திரைகளில் உள்ள பெருட்களைப் பற்றி அறியாமல் எடுத்துக்கொண்டதன் விளைவாகத்தான் இது நடைபெற்றது என்றார். நிக்கோலஸின் பதிலை ஏற்ற சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அவருக்கு 11 மாதம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.