வருடந்தோறும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடராக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கும் இத்தொடர் பிப்ரவரி 21ஆம் தேதி வரை மெல்போர்னில் நடைபெறும் என சர்வதேச டென்னிஸ் வல்லுநர்கள் சங்கம் (ஏடிபி) அறிவித்தது. மேலும் இத்தொடருக்கான கரோனா நெறிமுறைகளை ஆஸ்திரேலியன் ஓபன் நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் மெல்போர்னில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், இத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதிலளிக்கும்விதத்தில் ஆஸ்திரேலியன் ஓபன் தலைமை நிர்வாக அலுவலர் கிரேக் டைலி, திட்டமிட்டப்படி ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் பிப்ரவரியில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கிரேக் டைலி, “ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான விமான விவரங்களை இறுதிசெய்வதில் சில தவிர்க்க முடியாத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் அதனைப் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
மேலும் இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் மாற்றங்களைச் செய்துள்ளோம். அதன்படி மகளிருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் துபாயிலும், ஆடவருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தோஹாவிலும் ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து அரசிடம் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. அதனால் திட்டமிட்டப்படி பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுவது உறுதி. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: IND vs AUS: பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயம்..!