மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (பிப்.18) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா, அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியில் நவோமி ஒசாகா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அனுபவ வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இன்று நடைபெற்ற மற்றோரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடி, செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை எதிர்த்து விளையாடினார்.
இப்போட்டியின் முதல் செட்டை ஜெனிஃபர் பிராடி 6-4 என கைப்பற்ற, இரண்டாவது செட்டை முச்சோவா 6-3 என கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை உண்டாக்கினார்.
ஜெனிஃபர் பிராடி vs கரோலினா முச்சோவா
அதன்பின் நடைபெற்ற மூன்றாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெனிஃபர் பிராடி 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி முச்சோவாவிற்கு அதிர்ச்சியளித்தார். இதன் மூலம் ஜெனிஃபர் பிராடி 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் நவோமி ஒசாகா, ஜெனிஃபர் பிராடியை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க:‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ இனி ‘பஞ்சாப் கிங்ஸ்’