மகளிருக்கான ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர் பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றுவருகிறது. அந்தவகையில், ஆசியா/ஓசியானியா பிரிவுக்கான போட்டிகள் துபாயில் நடைபெற்றன. அதில், சீனா, சீன தைபே, இந்தோனேசியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான், இந்தியா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.
விஷால் உப்பல் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் சானியா மிர்சா, அன்கித் ரெய்னா, ருத்துஜா, ரியா பாட்டியா, சவுஜன்யா பவிசெட்டி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தத் தொடரில் இந்தியா சீனாவைத் தவிர்த்து உஸ்பெகிஸ்தான், தென் கொரியா, சீன தைபே ஆகிய அணிகளிடம் வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்தோனேசியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்தியா மோதியது.
இதில், ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் ருத்துஜா 3-6, 6-0, 3-6 என்ற செட் கணக்கில் இந்தோனேசியா வீராங்கனை பிரிஸ்கா மெட்லினிடம் (Priska Madelyn) தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் பிரிவு போட்டியில் அன்கித் ரெய்னா, சுட்ஜியாடிவுடன் மோதினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்கித் ரெய்னா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
இதன்பின் ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரட்டையர் பிரிவு போட்டியில் சானியா மிர்சா - அன்கித் ரெய்னா ஜோடி 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பிரிஸ்கா மெட்லின் - சுட்ஜியாடி ஜோடியை வீழ்த்தியது. இதனால், இந்தியா இப்போட்டியில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தி ஃபெட் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இதையும் படிங்க:சிறுவர்களுடன் தெருவில் டென்னிஸ் விளையாடிய ஜோகோவிச்!