நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச் சார்பில் குரோஷியாவில் நடந்துவரும் ஆட்ரியா டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் நடச்சத்திர வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் பங்கேற்றார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக உடல்நிலையில் சரியில்லாமல் அவதிப்பட்டுவந்த டிமிட்ரோவுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அச்சோதனையின் முடிவில் டிமிட்ரோவிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் இத்தகவலை கிரிகோர் டிமிட்ரோவ் தனது சமூக வலைதள பதிவு மூலமும் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து இம்மாத இறுதியில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த, அட்ரியா டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியை ரத்துசெய்வதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அட்ரியா சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்ட நாடுகளுடன் கரோனா தொற்று குறித்தான நடவடிக்கையை மிகவும் கண்டிப்புடன் நாங்கள் பின்பற்றிவருகிறோம். மேலும் டிமிட்ரோவுடன் தொடர்புகொண்டவர்களை சோதனை செய்தபோது, அவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் வீரருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட காரணத்தால், அட்ரியா டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியை நாங்கள் ரத்துசெய்கின்றோம்’ என்று தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பாக நடைபெறவிருந்த அனைத்துத் தொடர்களும் ஜூன் 31ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.