துபாய்: ஐசிசியின் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. 'சூப்பர் 12'ல சுற்றுப்போட்டிகள் தற்போது சூடுபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்றுதான் தங்களின் இரண்டாவது ஆட்டத்தை விளையாடவுள்ளன.
இந்த இரண்டு அணிகளும் இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, இவ்விரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்துள்ளன.
பாண்டியா பவுலிங்?
இந்திய அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்றுதான் கூறவேண்டும். விராட் கோலியை தவிர பிற பேட்டர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டைக் கூட இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றவில்லை.
ஹர்திக் பாண்டியாவிற்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு நாளாக பேட்டிங், பவுலிங் என வலைபயிற்சியில் ஈடுபட்டுவந்தார். அதனால், இன்றைய போட்டியில் அவர் ஆறாவது பவுலராக பந்துவீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேன் வில்லியம்சன் தலைமயிலான நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு இன்று கடும் நெருக்கடியை அளிக்கக்கூடும். ஐசிசி தொடர்கள் என்றாலே பல ஆண்டுகளாக இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வந்துள்ளது. அந்த தோல்வி வரலாற்றை இன்றுடன் நிறைவுசெய்ய இந்தியா கடுமையாக போராடும். துபாய் சர்வதேச மைதானத்தில் இப்போட்டியில், டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இரு அணிகளுக்கும் இது வாழ்வா, சாவா போட்டி என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இதையும் படிங்க: பட்டாசாய் வெடித்த பட்லர்; பஞ்சு பஞ்சாய் பறந்த ஆஸ்திரேலியா!