சார்ஜா:ஏழாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மாலை நடைபெற்றது.
சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் பதும் நிஷான்கா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இலங்கை நிதான ஆட்டம்
பிற பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை எடுத்தது. பதும் நிஷான்கா 58 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் பிரிடோரியஸ், ஷம்ஷி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்க பேட்டர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணி பவர்பிளே முடியில் 2 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்களை எடுத்தது.
மிடில் ஆர்டர் சொதப்பல்
இதன்பின்னர் மிடில் ஆர்டர் பேட்டர்களான பவுமா, மார்க்ரம் இருவரும் நிதானமாக ஆடியதால் 17 ஓவர்களில் 112 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால், கடைசி ஐந்து ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.
ஆட்டத்தின் 18ஆவது ஓவரை வீசிய ஹசரங்கா, முதல் இரண்டு பந்துகளில் பவுமா, பிரிடோரியஸ் ஆகிய இருவரின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை சூடுபிடிக்கச் செய்தார். இதையடுத்து, களமிறங்கிய ரபாடா 19ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்து தென் ஆப்பிரிக்காவின் அழுத்தத்தை சிறிது தணித்தார். இதனால், கடைசி ஓவரில் 15 ரன்கள் வேண்டிய நிலை ஏற்பட்டது.