அபுதாபி: ஏழாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் - 12 சுற்றுப்போட்டிகள் ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று (நவ. 3) மோதின.
அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஜோடி மிரட்டலான தொடக்கத்தை அளித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 140 ரன்கள் குவித்தபோது, ரோஹித் சர்மா 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மிரட்டிய ராகுல் - ரோஹித்
இதையடுத்து, சற்றுநேரத்தில் கே.எல். ராகுலும் 69 ரன்களில் வெளியேறினார். பின்னர், ஜோடி சேர்ந்த பந்த் - ஹர்திக் ஆகியோர் இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்ட இந்திய அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 210 ரன்கள் குவித்தது.
ரிஷப் பந்த் 27 (13) ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 35 (13) ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கன் பந்துவீச்சில் குல்பதீன், கரீம் ஜனட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அஸ்வின் - ஜடேஜா சுழல் ஜாலம்
211 ரன்கள் என்ற இமலாய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் சஷாத் 0, ஷஷாய் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பவர்பிளே ஓவர்களில் குர்பாஸ் சற்று அதிரடி காட்ட, பவர்பிளேயில் ஆப்கன் 47 ரன்களை குவித்தது.