துபாய்:ஏழாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில், இரண்டாம் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் நேற்று (நவ. 5) மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இத்தொடரில் விராட் கோலி வென்ற முதல் டாஸ் இதுதான்.
வித்தை காட்டிய இந்தியா
முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய ஸ்காட்லாந்து அணி, இந்திய பந்துவீச்சு வரிசையை தாக்குப்பிடிக்க முடியாமல் தனது விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. முன்வரிசை வீரர்களான கோயிட்சர் 1, முன்சே 24, பெரீங்டன் 0, க்ராஸ் 2 ரன்களில் பவர்பிளே ஓவர்களிலேயே பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து, லீஸ்க் - மேக்லியோட் ஜோடி சற்றுநேரம் தாக்குப்பிடித்தது. இந்த இணையை ஜடேஜா சிதறடித்தார். லீஸ்க் 21, கிறிஸ் கிரீவ்ஸ் 1 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஜடேஜா ஜாலம்
பின்னர், முகமது ஷமி வீசிய 17ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில், ஸ்காட்லாந்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது பந்தில் சரீஃப் ரன் அவுட்டானதால் முகமது ஷமிக்கு ஹட்ரிக் வாய்ப்பு இல்லாமல்போனது.
அடுத்த ஓவரில் பும்ரா, மார்க் வாட்டை விக்கெட் எடுக்க, ஸ்காட்லாந்து 17.4 ஓவர்களில் 85 ரன்களில் ஆல்-அவுட்டானது. ஜடேஜா, ஷமி ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, கே.எல். ராகுல் - ரோஹித் சர்மா ஆகியோர் 86 ரன்களை பவர்பிளே ஓவர்களிலேயே அடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடினர்.
பவுண்டரி மழை
அதன்படி, ஐந்து ஓவர்களில் அந்த இணை 70 ரன்களை குவித்து மிரட்டியது. ஐந்து ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் 30 (16) ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் அதிரடியைத் தொடர்ந்த ராகுல் 18 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
இந்த தொடரில் வேகமாக அரைசதம் அடித்த பெருமையை ராகுல் பெற்றார். இவர் 50 (19) ரன்களில் ஆறாவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்தது. இதுதான், பவர்பிளேயில் (டி20) இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்.
அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்ஸரை பறக்கவிட, இந்திய அணி 6.3 ஓவர்களிலேயே வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன்மூலம், ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியுற்றது.
ஆப்கனை எதிர்நோக்கி இந்தியா
இந்திய அணியின் இந்த வெற்றி மூலம் நெட் ரன்ரேட் உயர்ந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை (நவ. 7) நடைபெறும் போட்டியில், ஆப்கன் வெற்றிபெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விராட் கோலி பிறந்தநாள் தனது 33ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் ஆட்டம் அவருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்திய தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியா அணியுடன் நாளை மறுதினம் (நவ. 8) மோதுகிறது.
இன்றையப் போட்டிகள்
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி அபுதாபியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இதையும் படிங்க: மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ ஓய்வு!