ஐக்கிய அரபு அமீரகம்: ஐசிசி ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பிரிவு அணிகளுக்கான சூப்பர்-12 சுற்றுப்போட்டிகள் நேற்றுடன் (நவ. 6) நிறைவடைந்தது.
முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மாலை அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது.
பிராவோ ஓய்வு
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பொல்லார்ட் 44 (31) ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
158 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. ஆஸி., அணிக்கு அதிகபட்சமாக வார்னர் 89 (56), மிட்செல் மார்ஷ் 53 (32) ரன்களை எடுத்தனர். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வுசெய்யப்பட்டார். நேற்றைய போட்டியோடு, மே.இ. தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் டூவைன் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
வழிமேல் விழிவைத்திருந்த ஆஸி.,
ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றி, இரவு நடைபெற இருந்த இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தின் பந்துவீச்சை பதம் பார்த்தது.
டி காக் 36 (27), வான் டெர் ட்யூஸென் 94 (60), மார்க்ரம் 52 (25) என அதிரடியாக ரன்களை குவிக்க, தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்தது. மார்க்ரம், ட்யூஸென் ஜோடி இறுதிவரை களத்தில் இருந்து 103 ரன்களுக்கு பாட்னர்ஷிப் அமைத்தது. இங்கிலாந்து பந்துவீச்சு சார்பில் மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணிக்கு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றாலும், நேற்றைய போட்டியில் வெற்றி இரண்டாம்பட்சம்தான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஏற்கெனவே எட்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்தன. இப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணியும் எட்டு புள்ளிகளை பெறும்.
இங்கிலாந்துக்கு 87; தென் ஆப்பிரிக்காவுக்கு 131
எனவே, அதிக ரன்ரேட் உள்ள அணிகள்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் கடுமையாக மோதின. மேலும், தென் ஆப்பிரிக்கா அணி, அடுத்த சுற்றுக்கு தகுதிபெற இங்கிலாந்து அணியை 131 ரன்களுக்குள் தடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. இங்கிலாந்து அணிக்கோ, 87 ரன்கள் எடுத்தால் அடுத்த சுற்று என்ற நிலை ஏற்பட்டது.