சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்க உள்ள நிலையில், எங்கு திரும்பினாலும் செஸ் கட்டங்களும், செஸ் குறித்த தகவல்களுமே நிறைந்திருக்கின்றன. சதுரங்கப்போட்டி என்றழைக்கப்படும் செஸ் போட்டியின் ஆணிவேர் இந்தியா என்பதால் செஸ் ஒலிம்பியாட் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் நிரம்பி வழியும் இந்தியாவில் செஸ் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதில் எந்த வியப்பும் இல்லை. மேலும், இந்தியாவின் சார்பில் மூன்று ஆடவர் அணிகள், மூன்று மகளிர் அணிகள் உள்பட மொத்தம் 30 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஜூனியர், சீனியர் போன்ற வயது வகைப்பாடு கிடையாது என்பதால், அனைத்து வயதினரும் இதில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், வெறும் எட்டு வயதான சிறுமி ஒருவரும் இத்தொடரில் பங்கேற்றுள்ளார். ராண்டா சேடர் என்னும் அந்த பாலஸ்தீன சிறுமிதான் இத்தொடரில் மிகவும் இளைமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராண்டாவின் தந்தை, ராண்டாவுக்கு ஐந்து வயதில் செஸ் விளையாட கற்றுக்கொடுத்துள்ளார். விரைவாகவே செஸ்ஸை இறுக்கி பிடித்துக்கொண்ட ராண்டா, தற்போது செஸ் விளையாட்டையே தனது வாழ்க்கையாக மாற்றியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் ஹெப்ரான் நகரத்தைச் சேர்ந்த ராண்டா, இதற்கு முன் பல்வேறு செஸ் தொடர்களில் விளையாடியுள்ளார். பாலஸ்தீனத்தின் மகளிர் சாம்பியன்ஷிப் தொடரில் ராண்டா இரண்டாவது இடத்தை பிடித்து, செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு தகுதிபெற்றார்.
மகளிர் கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் ராண்டா, இத்தொடரில் தனது நாட்டை வெற்றிபெற செய்ய தன்னால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது வழிகாட்டியாக கருதும் ஹங்கேரி நாட்டின் கிராண்ட் மாஸ்டர் ஜூடிட் போல்கரை, சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜூடிட் போலகர் தனது ட்விட்டரில், "நான் ராண்டாவின் விளையாட்டை நிச்சயம் பின்தொடர்வேன். அவரின் வெற்றிக்கு பிறகு அவரை வரவேற்க தயாராக உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் மொத்தம் 187 நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், இன்று தொடங்கி 11 சுற்றுகளாக நடக்கும் போட்டிகள் வரும் ஆக. 9ஆம் தேதி நிறைவடைகிறது. தொடரின் முடிவில் முன்னணியில் இருக்கும் அணிகள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட்: செஸ் போர்டு முதல் போட்டி முடிவுகள் வரை... எல்லாமும் இதோ...!