சென்னை: நேற்றைய முன்தினம் (நவ.7), ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில், 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணிக்கு தீயாக களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாசி, 292 ரன்கள் என்ற இலக்கை 46.5 ஓவர்களில் அடைந்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதில், மேக்ஸ்வெல் அடித்த 201 ரன்கள் உலகமெங்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆச்சரியம் மிகுந்த நிகழ்வு, எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கிரிக்கெட் ரசிகருக்கே ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தனது அருகிலே இருக்கும் அவரது மனைவிக்கு ஏற்படுத்தி இருக்காதா என்ன? எனவேதான், “All the emotions 201" என்ற பதிவை தனது இன்ஸ்டாவில் தட்டி விட்டிருந்தார், சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட வினி ராமன்.
யார் இந்த வினி ராமன்? தமிழ்நாட்டின் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட வினி ராமனின் குடும்பத்தினர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு குடியேறினர். இந்த நிலையில், கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் நாள் வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பிறந்தார்.
இதனையடுத்து மெண்டோன் பெண்கள் கல்லூரியில் (Mentone Girl's Secondary College) படிப்பை முடித்த வினி ராமன், மருத்துவ அறிவியலில் பட்டம் பெற்று பாரமசிஸ்ட்டாக (Pharamacist) தனது பணியில் இருக்கிறார். நீச்சல், டிராவலிங் மற்றும் நேரடியாக கிரிக்கெட் போட்டிகளைk காண்பதில் விருப்பம் உள்ளவராக இருந்த வினி ராமனுக்கு, மேக்ஸ்வெல் மீது விருப்பம் ஏற்படத் தொடங்கியது.
கிளென் மேக்ஸ்வெல் உடனான சந்திப்பு வினி ராமனுக்கு எப்போது நிகழ்ந்தது? கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மேக்ஸ்வெல் உடன் வினி ராமன் நட்பாக இருந்ததாக அறியப்பட்டாலும், முதன் முறையாக 2017ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வினி பகிர்ந்தார். இதன் பிறகு, மேக்ஸ்வெல் - வினி டேட்டிங் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.