ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனையான வித்யா ராம்ராஜ் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்துள்ளார்.
வித்யா ராம்ராஜ் 55.68 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த போட்டியில் பஹ்ரைன் வீராங்கனையான ஒலுவாகேமி முஜிதத் அடேகோயா 54.45 விநாடிகளில் இலக்கை எட்டி முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் சீன வீராங்கனையான மோ ஜியாடி 55.01 விநாடிகளில் இலக்கை எட்டி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் 4-வது இடத்தில் நீடித்த வித்யா ராம்ராஜ் கடைசி நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு மூன்றாவது இடத்துக்கு முன்னேறி வெண்கலப் பதக்கத்தை வென்றார். தமிழக வீராங்கனையான இவர் கோவையைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர் நேற்று நடந்த தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தின் ஹீட் சுற்றின் போது இந்தியாவின் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் 39 ஆண்டுகால சாதனையைச் சமன் செய்து அசத்தி இருந்தார்.
1984-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷா 55.42 விநாடிகளில் இலக்கை அடைந்து இருந்தார். இந்திய வீராங்களைகளிடையே 39 ஆண்டுகளாக அதுவே சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த சாதனையை நேற்று வித்யா ராம்ராஜ் சமன் செய்து இருந்தார். மேலும் இந்த சாதனையே வித்யா ராமராஜின் சிறந்த ரெக்கார்ட் ஆகவும் பதிவானது.
இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் 55.68 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ள வித்யா ராம்ராஜ் அவரது சிறந்த ரெக்கார்டான 55.42 விநாடியை விட .26 விநாடி பின்தங்கி உள்ளார். நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.