இந்திய அணியின் நட்சத்திர மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இவர் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
இந்நிலையில் பஜ்ரங் புனியா சர்வதேச வீரர்களுடன் அமெரிக்காவில் ஒருமாத காலம் பயிற்சி மேற்கொள்வதற்கான அனுமதியை கடந்த டிசம்பர் மாதம் மிஷன் ஒலிம்பிக் செல் வழங்கியிருந்தது.
அதன்படி பயிற்சியாளர்களான எம்சாரியோஸ் பெண்டினிடிஸ், பிசியோ தனஞ்செய் ஆகியோருடன் அமெரிக்கா சென்று பயிற்சி மேற்கொண்டிருந்த பஜ்ரங் புனியாவின், பயிற்சிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து பஜ்ரங் புனியாவின் அமெரிக்க பயிற்சி முகாமை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதாக மிஷன் ஒலிம்பிக் செல் இன்று அறிவித்தது. மேலும் அதற்கான செலவுத்தொகையாக ரூ.11.65 லட்சமும் ஒதுக்கியுள்ளது.
இது குறித்து பேசிய பஜ்ரங் புனியா, "இங்கு பயிற்சி பெறுவது எனக்கு நல்ல பலனை அளித்துள்ளது. ஏனெனில் நான் இந்தியாவின் பயிற்சிபெறும்போது 74, 79 கிலோ எடைப் பிரிவு வகை மல்யுத்த வீரர்களுடனே பயிற்சி பெற முடிந்தது. ஆனால் இங்கு எனது எடைப் பிரிவில் நான் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கங்குலி நாளை டிஸ்சார்ஜ் - மருத்துவமனை தகவல்