கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார் (46). இவர் பழம் பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இன்று (அக்.29) காலை புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, "மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. திரைத்துறை ஒரு நல்ல மனிதரை இழந்துள்ளது. நான் பார்த்து பழகியதில் நேர்மையான நல்ல மனிதர் புனித். இந்த உலகை விட்டு வேகமாக விலகிவிட்டார். அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.
புனித் ராஜ்குமார் இனி இல்லை என்பதை நினைக்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. வாழ்க்கை கணிக்கமுடியாதது. குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி ட்வீட் டி20 பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில், "வெகு விரைவாக எங்களை விட்டு பிரிந்துவிட்டீர்கள். திரையுலகின் சிறந்த மகத்தான நல்ல நடிகர் நீங்கள். உங்களை பிரிந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், எண்ணற்ற ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் ட்வீட் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில், "சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மரண செய்தி பெரும் சோகத்தை தந்திருக்கிறது. அனைவருக்கும் பிடித்தமான 'அப்பு'வை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், "மிகவும் வருந்தத்தக்க செய்தி. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ரசிகர்கள் அமைதி காத்து, அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்தனை செய்ய வேண்டும். ஓம் சாந்தி" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
புனித் ராஜ்குமார் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாகவும், இந்திய சினிமாவிற்கு இது மிகப்பெரும் இழப்பு என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டகாரர் விரேந்திர சேவாக் ட்வீட் செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.