பானிபட்:உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் தனதாக்கியுள்ளார் நீரஜ் சோப்ரா.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் ”இந்தியாவின் தங்க மகன்” என்று அழைக்கப்படும் நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது முயற்சியிலேயே 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
முன்னதாக, ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு நீரஜ் சோப்ரா சிறப்புப் பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறுகையில் ”கடினமான உழைப்பு மற்றும் தன்னம்பிக்கைதான் வெற்றி அடைவதற்கான மூலதனம், என தெரிவித்தார்.
ஒவ்வொரு வீரரைப் போலவே நானும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களைப் பெற வேண்டும் என்று கனவு கண்டேன். எனது முயற்சியும் கடின உழைப்பு அந்த இலக்கை அடைய உதவியது மகிழ்ச்சியாக உள்ளது.