சென்னை:மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் - சிந்து தம்பதியின் மகள் லக்க்ஷிதா (11). ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். தனது ஆறு வயதில் இருந்தே ரோலர் ஸ்கேட்டிங்கில் தீவிரமாகப் பயிற்சி பெற்று வந்தார்.
தனியார் அகாடமியில் பயிற்சியாளர்கள் மகேஷ், கார்த்திக் ஆகிய இருவரிடம், கடந்த ஆறு வருடமாகப் பயிற்சி எடுத்து வந்த லக்க்ஷிதா, சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரையில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார்.
ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை லக்க்ஷிதா மூன்று வெவ்வேறு வகையான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற லக்க்ஷிதா, தேசிய அளவில் மூன்று தங்கப் பதக்கங்களையும், தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த லக்க்ஷிதா, இதுவரை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று 28 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கங்களை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தப் பயிற்சியாளர்களுக்கும், தன் பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் அதேநேரத்தில் தனது படிப்பிலும் சிறப்பாக திகழ்ந்து விளங்குவதாகத் தெரிவித்தார்.
காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் மட்டுமே பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்த அவர், பல்வேறு மாநிலங்களிலிருந்து தன்னை போன்று திறமையானவர்கள் கலந்து கொண்ட தேசிய அளவிலான போட்டியில் ஒரு தங்கப் பதக்கம் நிச்சயம் வெல்வேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் மூன்று தங்க பதக்கங்களை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதையும் படிங்க: IPL 2021 CSK vs RCB: ஆர்சிபியை சம்பவம் செய்த சிஎஸ்கே!