மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் இந்திய விளையாட்டு ஆணையத்தின் அருகே காந்தி விளையாட்டு மைதானம் இயங்கிவருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, டேக்வாண்டோ ஆகிய நான்கு விளையாட்டுப் பிரிவுகளில் 60 மாணவர்கள் சேர்ந்து பயிற்சி பெற்றுவருகின்றனர்.
சென்னை, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு அடுத்த நிலையில் சேலத்தில் மட்டுமே இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் இயங்கி வருவதால், தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் இந்திய விளையாட்டு ஆணையத்தில் இயங்கிவரும் கபடி, கைப்பந்து விளையாட்டுப் பயிற்சிப் பிரிவுகளுக்குப் போதிய பயிற்சியாளர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படாததால் ஓய்வு பெற்றவர்களே மீண்டும் பயிற்சியளிக்கும் நிலை உருவாகியுள்ளது .