பாரீஸ்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (மே 29) அதிகாலை நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்தின் லிவர்பூல் அணியும், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
2ஆம் பாதியில் மிரட்டிய மாட்ரிட்: இரு அணிகளும் தொடர்ச்சியாக கோல் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. இருப்பினும், முதல் பாதியில் ஒரு கோல் கூட பதிவாகவில்லை. தொடர்ந்து, இரண்டாம் பாதி தொடங்கியவுடன் ரியல் மாட்ரிட் அணி திடீரென வேகமெடுத்தது. இந்நிலையில், போட்டியின் 59ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
கோட்டை சுவரான கோர்டோயிஸ்:இதற்கு பதிலடி கொடுக்க லிவர்பூல் வீரர்கள் கடுமையாக போராடினாலும், ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் கோர்டோயிஸ் தடுப்புச்சுவராக நின்று அனைத்து முயற்சிகளையும் தகர்த்தார். ஏறத்தாழ எதிரணியின் 3 கோல் முயற்சிகளை தடுத்த கோர்டோயிஸ், குறிப்பாக, 82ஆவது நிமிடத்தில் முகமது சாலா கோல் கம்பத்திற்கு மிக அருகில் அடித்த ஷாட்டை அருமையாக தடுத்து அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார்.