அகமதாபாத்:புரோ கபடி லீல் (டிச.02) 10வது சீசன் அகமதாபாத்தில் உள்ள பிரான்ஸ் ஸ்டேடியத்தில் கோலகலமாகத் தொடங்கியது. இதன் முதல் போட்டியில், குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி 38-32 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற 2வது போட்டியில், முன்னாள் சாம்பியனான யூ மும்பா அணி 34-31 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி யோத்தாஸ் அணியை வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸ்: இந்நிலையில் நேற்று (டிச.04) நடைபெற்ற 3 வது போட்டியில் தமிழ்தலைவாஸ் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. அகமதாபாத்தில் உள்ள ஈ.கே.ஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 42-31 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
பயிற்சியாளர் அசன் குமார்:இது குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் அசன் குமார் கூறுகையில், “புரோ கபடி லீக்கில் இது எங்களுக்கு முதல் போட்டியாகும். இதை உற்சாகத்துடன் நாங்கள் தொடங்க வேண்டும் என நினைத்தோம். அதேபோல், அணியில் உள்ள அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுத் தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்கள் அணியில் சில இளம் வீரர்கள் உள்ளனர். அவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் அறிந்து, அதனை நிவர்த்தி செய்யும் விதமாக அவர்களுடன் பணியாற்றியுள்ளேன். என்னைப் பொறுத்தவரையில் ஒரு போட்டியில் விளையாடுகிறோம் என்றால், எதிர் அணியினர் எவ்வளவு பலம் வாய்ந்தவர்கள் என்று பார்க்கும் முன், நம்முடைய திறமைகளைப் பார்ப்பது முக்கியம். தமிழ் தலைவாஸ் அணியில் உள்ள அணைத்து வீரர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
கோப்பை வெல்லுமா தமிழ் தலைவாஸ்?புரோ கபடி லீக் தொடங்கிய 5வது சீசனில் முதல் முறையாக (2017) களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி, ஒவ்வொரு சீசனிலும் தலா 22 போட்டிகளில் பங்கேற்றபோதும் இரட்டை இலக்க வெற்றி பெற்றதில்லை. இதுவரை 132 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, 30 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.
கடந்த சீசனில் ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக 10 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், வெற்றியுடன் 10வது சீசனைத் தொடங்கியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎலில் விளையாட வேண்டாம் - ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தல்! என்ன காரணம்?