புரோ கபடி லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. ஏற்கனவே தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யூ மும்பா, பெங்களூரு புல்ஸ், யூ.பி. யோதா ஆகிய அணிகள் குவாலிஃபையர் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 124ஆவது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் பெங்கால் அணி ஏற்கனவே குவாலிஃபையர் சுற்றுக்கு தகுதிபெற்றதினால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி அல்லது தோல்வியை சந்தித்தாலும் அந்த அணிக்கு பாதிப்பில்லாத சூழ்நிலையில் இன்று களமிறங்கியது.
ஆனால் இந்த சீசனில் பாட்னா அணி 21 போட்டிகளில் பங்கேற்று அதில் 8 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்த ஆண்டு குவாலிஃபையர் சுற்றுக்கு கூட அந்த அணியினால் தகுதிபெற இயலவில்லை.
ஆனால் இன்றைய போட்டியில் வழக்கத்துக்கு மாறாக அந்த அணியின் நட்சத்திர வீரர் பிரதீப் நர்வால் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் உறையவைத்தார். குறிப்பாக அவர் இன்றைய போட்டியில் பாட்னா அணியின் 50 சதவிகித ரைடுகளை தானே சந்தித்தார்.
இதனால் குழப்பமடைந்த பெங்கால் அணியினர் செய்வதறியாது பிரதீப் நர்வாலின் அட்டாக்கில் சிக்கி புள்ளிக்கணக்குகளை இழக்கத் தொடங்கினர். இதனால் ஆட்டநேர முடிவில் பாட்னா பைரேட்ஸ் அணி 69-41 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் பிரதீப் நர்வால் மட்டும் 31 ரைடுகள் சென்று 34 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். ஆனால் இந்த ஆக்ரோஷத்தை அவர் இந்த சீசன் தொடக்கம் முதலே தந்திருந்தால் பாட்னா பைரேட்ஸ் அணி இந்த வருடம் கோப்பையை வெல்ல வாய்ப்புகள் இருந்திருக்கும் என கபடி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த நட்சத்திர வீரர்!