2019ஆம் ஆண்டிற்கான புரோ கபடி தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்றுவருகின்றன. இத்தொடரின் 89ஆவது லீக் போட்டியில் தனது சொந்த மைதானத்தில் விளையாடிய புனேரி பால்தால் அணி குஜராத் ஃபார்சுனர்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டம் ஆடிய புனேரி அணி அஃபென்ஸில் குஜராத் அணியை பதம் பார்த்தது. குறிப்பாக புனேரி அணியின் நித்தின் தோமர் எதிரணியின் தடுப்பாட்ட பிரிவுக்கு சவாலாக விளையாடி ரசிகர்களை பிரமிக்கவைத்தார்.
ஆட்டத்தின் முதல் பாதி முடிவிலேயே புனேரி பால்தான் அணி 24- 10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் புனேரி அணி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தது.
ஆட்ட நேர முடிவில் புனேரி பால்தான் அணி 43 புள்ளிகளையும் குஜராத் ஃபார்சுனர்ஸ் அணி 33 புள்ளிகளையும் பெற்றன. இதன்மூலம் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பால்தான் அணி குஜராத் ஃபார்சுனர்ஸ் அணியை வீழ்த்தியது.
புனேரி பால்தான் அணி 34 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும் குஜராத் ஃபார்சுனர்ஸ் அணி 34 புள்ளிகளைப் பெற்று எட்டாவது இடத்திலும் நீடிக்கின்றன.