கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அனைத்து வகை விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. மே 17ஆம் தேதியோடு மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தி, அதில் பல தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்தது. அதில் பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம் எனக் கூறியது.
இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ''மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளைப் பின்பற்றி தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உடற்பயிற்சி நிலையம், ஸ்விம்மிங் பூல் ஆகியவை மூடப்பட்டே இருக்கும். ஏனென்றால் அதனை அனைத்து வீரர்களும் பயன்படுத்தும்போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஹாக்கி, கால்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் சமூக விலகலைக் கடைப்பிடிப்பது கடினமான விஷயம். அதனால் அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பயிற்சிகளில் ஈடுபடுத்த முடியாது. சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.