(ஓரிகன்)அமெரிக்கா:உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதலின் இறுதிச்சுற்றுக்கான தகுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூலை 22) நடைபெற்றது.
இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற வீரர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். 'ஏ' பிரிவில் நீரஜ் சோப்ரா இடம்பெற்றிருந்தார். 'பி' பிரிவில், நடப்புச்சாம்பியனும், கிரெனடா நாட்டைச்சேர்ந்தவருமான ஆண்டர்சன் பீட்டர்ஸ், மற்றொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெற 83.5 மீட்டர் இலக்கிற்கு வீச வேண்டும். அந்த இலக்கை எட்ட முடியவில்லை என்றால், இரண்டு பிரிவிலும் சிறப்பாக வீசிய 12 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவார்கள் என்பதே விதி.
இந்நிலையில், நீரஜ் சோப்ரா தனது முதல் த்ரோவிலேயே 88.39 மீட்டருக்கு வீசி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளார். இது அவரின் மூன்றாவது சிறந்த த்ரோவாகும்.
அடுத்த தங்கத்தை நோக்கி நீரஜ் - இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.91 மீட்டருக்கு வீசி இறுதிச்சுற்று பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நீரஜ் 88.39 மீட்டருடன் 2ஆவது இடத்தையும், ஜூலியன் வெபர் 87.28 மீட்டருடன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர். இந்தியாவின் ரோஹித் யாதவ் 80.42 மீட்டர் தூரத்திற்கு வீசி 11ஆவது இடத்தைப் பிடித்து, இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றார்.
89.94 மீட்டர் என்ற தேசிய சாதனையை வைத்துள்ள நீரஜ் சோப்ரா, 2017 லண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் 82.26 மீட்டருக்கு வீசி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை (அப்போது தகுதிச்சுற்று இலக்கு 83). மேலும், முழங்கை அறுவை சிகிச்சை காரணமாக 2019 தோஹா உலக சாம்பியன்ஷிப் தொடரையும் தவறவிட்டார்.
தற்போது முதன்முறையாக உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நீரஜ், இந்தியாவுக்கு ஒலிம்பிக்கை தொடர்ந்து, மீண்டும் ஒரு பதக்கத்தை (தங்கம்!) பெற்றுத் தருவார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதி சுற்றுக்குள் நுழைந்த அன்னு ராணி