ஐதராபாத் : சர்வதேச தடகள சம்மேளனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த தடகள வீரர் விருதுக்கு இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
சர்வதேச தடகள அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான வீரர், வீராங்கனைகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் ஆடவர் பிரிவில் நடப்பாண்டுக்கான சிறந்த தடகள வீரர் விருதுக்கு இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம், உலக சாம்பியன் போட்டியில் தங்கம், 2018ஆம் ஆண்டு இந்தோனேசியா மற்றும் 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு தொடரில் தங்கப் பதக்கம், 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் என தொடர்ச்சியாக தங்க பதக்கங்களை வென்று குவித்து உலகின் நம்பர் ஒன் வீரராக நீரஜ் சோப்ரா வலம் வருகிறார்.
இந்நிலையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ராவின் பெயர், சர்வதேச தடகள அமைப்பால் வழங்கப்படும், 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த தடகள வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. நீரஜ் சோப்ரா உள்பட 11 பேர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தி இந்த விருது வழங்கப்படுகிறது.
இதையடுத்து, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான சாய், நாட்டு மக்கள் அனைவரும், ஆன்லைன் மூலம் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளது. உலக தடகள கவுன்சில் மற்றும் சர்வதேச தடகள அமைப்பைச் சார்ந்தவர்கள் மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் வாக்களிக்கலாம் என்றும் ரசிகர்கள் சர்வதேச தடகள அமைப்பின் சமூக வலைதள பக்கங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
பேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்வதேச தடகள அமைப்பின் பக்கங்களில் பிரத்யேக கிராபிக்ஸ் ஒளிபரப்பப்பட்டு உள்ளதாகவும் அதன் மூலம் ரசிகர்கள் வாக்கு செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக தடகள கவுன்சிலின் வாக்குகள் 50 சதவீதம் முடிவிற்கு கணக்கிடப்படும் என்றும் அதே நேரத்தில் உலக தடகள அமைப்பின் தொடர்புடையவர்கள் வாக்குகள் மற்றும் பொது மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் இறுதி முடிவில் 25 சதவீதம் வரை கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் அக்டோபர் 28ஆம் தேதி நள்ளிரவுடன் வாக்குப்பதிவு நிறைவு செய்யப்படும் என்றும், வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு பிறகு வரும் நவம்பர் 13 அல்லது 14ஆம் தேதிகளில் இறுதிப் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்ட தலா 5 பெண் மற்றும் ஆண் தடகள வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :New Zealand Vs Bangladesh : டாஸ் வென்று நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு!