சென்னை: ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-வது எடிஷன் சென்னையில் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 03) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, தென்கொரியா, மலேசியா உள்ளிட்ட 6 அணிகள் விளையாடுகின்றன.
போட்டியின் 2-வது நாளான நேற்று (ஆகஸ்ட் 04) இந்தியா, ஜப்பான் ஆகிய அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தன. மொத்தம் நான்கு பகுதிகளாக நடைபெற்ற போட்டியில் முதல் பகுதியில் இரு அணிகளும் எந்த வெற்றி புள்ளிகளையும் பெறவில்லை. இரண்டாவது பகுதியில் 28-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் வீரர் நாகயோஷி பெனால்டி கார்னர் நேரத்தில் கோல் அடித்தார்.
இதனையடுத்து, 1-0 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் அணி முன்னிலை வகித்தது. மூன்றாவது பகுதியின் 43-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் பெனால்டி கார்னர் நேரத்தில் கோல் அடித்தார். இதனால் இரண்டு அணிகளும் 1-1 பள்ளி கணக்கில் சம நிலையில் இருந்தது. நான்காவது சுற்றில் இரண்டு அணிகளும் கோல் அடிப்பதற்காக கடுமையாக விளையாடினர். ஆனால் இரு அணிகளும் சமபலத்தால் மோதியதால் முன்னிலை பெற வாய்ப்பு இல்லாமல் போனது. இறுதியில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
தென்கொரியா - பாகிஸ்தான்:நடப்பு சாம்பியனான தென்கொரியா பாகிஸ்தானுடன் மோதியது. இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. முந்தய ஆட்டத்தில் மலேசியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடியது. 18-ஆவது நிமிடத்தில் அப்துல் ஷாஹித் ஃபீல்டு கோல் அடித்தார். அதன் பின் இரு அணிகளும் கடுமையாக மோதியன. மூன்றாவது பகுதியில் இரு அணிகளும் கடுமையாக மோதிய நிலையில் 53-நிமிடத்தில் கொரியாவைச் சேர்ந்த ஜிஹுன் யாங் கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். இதனால் ஆடம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.