இந்திய மகளிர் குத்துச்சண்டையில் நட்சத்திர வீரராக வலம்வருபவர் மேரி கோம். மணிப்பூரைச் சேர்ந்த 36 வயதான மேரி கோம், மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்பும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறார். அந்த வகையில் இவர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக பதக்கங்கள் (6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) வென்ற நபர் என்ற சாதனையை படைத்தார்.
இதனிடையே பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த மேரி கோம், "தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிவருகிறேன். எனக்குத் தேவையான உதவிகளை அரசுவழங்கியுள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதற்கு என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன்.
தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக எனது நாட்டிற்காக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுவருகிறேன். இந்தப் பயணத்தில் நான் சிறப்பாகச் செயலாற்றியிருக்கிறேன். அதிலும் குழந்தைகள் பிறந்த பின்பு பல்வேறு பொறுப்புகளுடன் போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.