தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் வென்ற மதுரை சிறுவர்கள்! - தங்கப்பதக்கம் வென்றனர்

மதுரை: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் நான்கு சிறுவர்கள் தங்கப்பதக்கமும் இரண்டு பேர் வெள்ளிப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

#silambam

By

Published : Sep 23, 2019, 1:28 PM IST

மதுரை விராட்டிபத்தில் இயங்கிவரும் ஸ்ரீ மாருதி சிலம்பப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற சிறுவர் சிறுமியர் கடந்த செப்டம்பர் 14, 15ஆம் தேதிகளில் மலேசியாவின் கோலாலம்பூர் புக்கிட் கலீல் என்ற தேசிய அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் இந்தியா உள்பட மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பல்வேறு வயதுகளில் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து 380 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 263 பேர் பங்கேற்றனர்.

இது குறித்து பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "தேசிய அளவில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற காரணத்தால், இவர்கள் அனைவரும் சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக மதுரையிலிருந்து சென்ற குழந்தைகள் இரட்டை கம்பு வீச்சில் காவியஸ்ரீயும் அதிஸ்ராமும் - ஒற்றைக் கம்பு வீச்சில் ராசிகாவும் - சுருள்வாள் வீச்சில் ராஜதுரையும் தங்கப்பதக்கம் வென்றனர். ஒற்றைக் கம்பு வீச்சில் கிஷோர், சுருள்வாள் வீச்சில் காருண்யாதேவி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்" என்றார்.

மாணவர் ராஜதுரையின் தாயார் சரோஜா கூறுகையில், "சிலம்பாட்டம் தமிழர்களின் பாரம்பரியக் கலை. ஆனால், அதற்குரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் இந்தக் கலைக்கு உரிய கௌரவத்தை அளித்தால்தான் மேலும் நிறைய பேர் பங்கேற்க முன்வருவார்கள்.

முறையான மைதான வசதியின்றியும்கூட இங்கே பயிற்சிபெற்று மாணவ, மாணவியர் சாதனை படைக்கின்றனர். உடல்திறன் மட்டுமன்றி மன வலிமைக்கும் சிலம்பாட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த கலையாகும். அதுமட்டுமன்றி பெண்களுக்கும்கூட மிக அற்புதமான தற்காப்புக்கலை. சர்வதேச போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற இவர்களுக்காக பெற்றோராகிய நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்" என்றார்.

சர்வதேச சிலம்ப போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை

பதக்கம் வென்ற குழந்தைகள் பேசுகையில், "தேசிய அளவில் தேர்வு பெற்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதை பெருமையாகக் கருதுகிறோம். மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைத் தேடித்தர வேண்டும் என்ற எண்ணம் வலுவாகியுள்ளது" என்றனர்.

சிலம்பாட்டத்தில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தக் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கிடைக்குமானால் மேலும் பல சாதனைகளைப் படைப்பார்கள் என்பது மட்டும் உறுதி. செய்ய வேண்டியது அவர்களின் கடமை... பொறுத்திருந்து பார்ப்போம்...

இதையும் படிங்க: சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்று மாணவர்கள் சாதனை!

ABOUT THE AUTHOR

...view details