ஃபார்முலா ஒன் கார் பந்தயம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பந்தயக் களத்தில் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நேற்று நடைபெற்ற யு.எஸ். கிராண்ட்ப்ரிக்ஸ் பந்தயத்தில் பல முன்னணி வீரர்களும் கலந்துகொண்டனர். இதில் மெர்சிடிஸ் அணி சார்பில் களமிறங்கிய வேலட்டரி போட்டாஸ் பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 33 நிமிடம் 55 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். அவரை விட 4.14 விநாடிகள் பின்னால் வந்த சக அணி வீரரும் நடப்பு சாம்பியனுமான பிரிட்டனின் லூயிஸ் ஹாமில்டன் இரண்டாம் இடம்பிடித்தார். மூன்றாம் இடத்தை ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பிடித்தார்.
ஃபார்முலா ஒன் கார் பந்தயம் இப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த லூயிஸ் ஹாமில்டன் புள்ளிகள் அடிப்படையில் நடப்பு சீசனுக்கான சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் ஜெர்மனைச் சேர்ந்த ஃபார்முலா ஒன் ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கருக்கு (7 பட்டங்கள்) அடுத்தபடியாக அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனைப் பட்டியலில் ஹாமில்டன் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.
இந்தாண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரிக்ஸ் பந்தயத்தின் மூலமாக 2019 ஃபார்முலா ஒன் சீசன் தொடங்கியது. அந்தப் பந்தயத்தில் இரண்டாம் இடம்பிடித்த ஹாமில்டன் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பஹ்ரைன், சீன, ஸ்பானிஷ், மொனாக்கோ, கனடியன், பிரெஞ்சு, பிரிட்டீஷ், ஹங்கேரி, ரஷ்யன், மெக்சிக்கன் உள்ளிட்ட கிராண்ட்ப்ரீ பந்தயங்களில் முதலிடம் பிடித்து பிற வீரர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தார்.
நடப்பு சீசனில் பிரேசில், அபுதாபி கிராண்ட்ப்ரீ பந்தயங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஹாமில்டன் தனது சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளார். தற்போது 34 வயதாகும் ஹாமில்டன் முதன்முறையாக 2008ஆம் ஆண்டில்தான் ஃபார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின் 2014, 2015, 2017, 2018, 2019 (2016இல் இரண்டாம் இடம்) என அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
நேற்றைய வெற்றியின் மூலம் அர்ஜென்டினா வீரர் ஜுவான் மானுவேல் பாங்கியோவின் (5 பட்டங்கள்) சாதனையை ஹாமில்டன் முறியடித்துள்ளர். 2003ஆம் ஆண்டு மைக்கேல் ஷூமேக்கர் தனது ஆறாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும்போது அவருக்கும் 34 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனால் ஹாமில்டன் அடுத்தமுறையும் இந்தப் பட்டத்த வென்று மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.