கோலாலம்பூர்: ஜூனியர் ஹாக்கியின் 13வது உலகக் கோப்பை தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, அர்ஜெண்டீனா, மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, கொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஓவ்வொறு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இதில், இந்திய அணி சி பிரிவில் உள்ளது. தனது முதல் போட்டியை 4-2 என்ற கணக்கில் கொரிய அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது. இந்நிலையில், இன்று (டிச.07) இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஸ்பெயின் அணி சார்பில் கேப்ரே வெர்டீல் போல் முதல் மற்றும் 41 நிமிடங்களிலும், ரஃபி ஆண்ட்ரியாஸ் 18, 60 நிமிடங்களும் தலா 2 கோல் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். இந்திய அணி சார்பில் ரோகித் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
இதனால் ஸ்பெயின் அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தனது 2வது வெற்றியை பெற்று 6 புள்ளிகளுடன் 'சி' பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. அதே சமயத்தில் கடந்த போட்டியில் அபார வெற்றியை பெற்று முதல் இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 3வது இடத்தில் உள்ளது. முன்னதாக இதே பிரிவில் உள்ள கொரியா - கனடா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கொரிய அணி 4-1 என்ற கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"கவுதம் கம்பீர் என்னை தகாத வார்த்தையால் திட்டினார்" - ஸ்ரீசாந்த்!