மலகா : டென்னிஸ் விளையாட்டுக்கான டேவிஸ் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஸ்பெயினின் மலகா நகரில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி போட்டி நேற்று (நவம்பர். 26) நடந்தது. இதில் 2-0 என்ற கணக்கில் இத்தாலி அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இப்போட்டியின் இரண்டாவது ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீரரான அலெக்ஸ் டி மினாரை 6-க்கு 3, 6-க்கு 0 என்ற கணக்கில் வென்ற இத்தாலி வீரர் ஜானிக் சின்னரின் செயல்திறன் அந்த அணிக்கு 1976ஆம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை வெல்ல உதவியது. இந்த வெற்றியை பெறுவதற்கு இத்தாலி அணிக்கு சுமார் 1 மணி நேரம் 21 நிமிடம் தேவைபட்டன.
மேலும், சின்னர் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் எப்படி உலகக் கோப்பையோ அதேபோல் டென்னிஸில் டேவிஸ் கோப்பை. இந்த டேவிஸ் கோப்பை தொடரானது 1900வது ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை இத்தொடரில் அதிக முறையாக அமெரிக்கா 32 முறையும், ஆஸ்திரேலிய அணி 28 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இத்தாலி அணி கோப்பை வென்றுள்ளது. 1976ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இது அந்த அணிக்கு இரண்டாவது கோப்பையாகும்.
இறுதி போட்டியின் வெற்றிக்கு பிறகு இத்தாலி வீரர் சின்னர் பேசியுள்ளார். அதில் "நாங்கள் மிகவும் சிறியவர்கள். எங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறை நாட்டிற்காக கோப்பையை வெல்ல ஆவலுடன் இருந்தோம். அது தற்போது நிகழ்ந்துள்ளது. இது உண்மையில் சிறப்பான உணர்வு" என்றார்.
மற்றொரு இத்தாலி வீரரான அர்னால்டி பேசுகையில்; "என் வாழ்க்கையில் முக்கியமான போட்டியில் நான் வென்றதாக நினைக்கிறேன்" என்றார். மேலும், இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் கூறுகையில்; "நாங்கள் வெற்றிக்கு மிக அருகே வரை சென்று தோல்வியை தழுவியுள்ளோம். நாங்கள் அடுத்த தொடரில் நிச்சியம் கோப்பையை வெல்வோம்" என்றார்.
இதையும் படிங்க:குஜராத் அணிக்கு புது கேப்டன்! முடிவுக்கு வந்த வதந்திகள்.. கேப்டனான சுப்மன் கில்! இதுக்கு இவ்வளவு அக்கப்போரு?