உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.) சார்பில் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், 32ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி தொடங்கயிருந்தது. ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக இந்தத் தொடர் அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், காணொலி கூட்டம் மூலம் நடைபெற்ற ஐ.ஓ.சி நிர்வாகக் குழு கூட்டத்தின் போது, கரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் தொடருக்கான செலவில் சுமார் 800 மில்லியன் டாலர்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்கவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பாச் கூறுகையில், “ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான செலவுகளில் 800 மில்லியன் டாலர்கள் வரை நாங்கள் ஏற்க தயாராகவுள்ளோம். இதில் 650 மில்லியன் டாலர்கள் அடுத்த ஆண்டில் தொடங்கவுள்ள விளையாட்டிப் போட்டிகளுக்காகவும், 150 மில்லியன் டாலர்கள் ஒலிம்பிக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளுக்கும் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஒலிம்பிக் வரலாற்றில் ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான செலவுகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கிரேக் சாப்பல் பயிற்சியின் கீழ் விளையாடியது மோசமான நாள்கள் - ஹர்பஜன் சிங்