ஹாங்சோ :ஆசிய விளையாட்டில் மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று (அக். 5) மகளிருக்கான வில்வித்தை இறுதி போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தைவான் மகளிரை எதிர்கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் இந்திய மகளிர் அணி 230 புள்ளிகள் பெற்று நூலிழையில் தங்க பதக்கதை வென்றது.
இறுதிப் போட்டியில் தைவான் மகளிர் அணி 229 புள்ளிகள் பெற்ற நிலையில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் இந்திய மகளிரிடம் பதக்கத்தை கோட்டைவிட்டது. நடப்பு உலக சாம்பியனான இந்திய மகளிர் அணியின் ஜோதி சுரேகா வென்னம், அதிதி சுவாமி, மற்றும் பர்நீத் கவுர் ஆசிய விளையாட்டிலும் மகளிர் அணி பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
முன்னதாக கால் இறுதியில் ஹாங் காங் அணியை 231க்கு 220 என்ற புள்ளிகள் கணக்கிலும், அரையிறுதியில் இந்தோனேஷியா மகளீரையும் இந்திய பெண்கள் அணி வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆசிய விளையாட்டில் வில்வித்தை போட்டியில் மற்றும் இந்திய அணி கைப்பற்றிய 5வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :உலகக் கோப்பையை வெல்ல அனைத்து வழிகளிலும் போராட தயார் - ரோகித் சர்மா!