பர்மிங்ஹாம்:காமன்வெல்த் 2022 தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று முன்தினம் (ஜூலை 29) தொடங்கியது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் மொத்தம் 205 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரில், பளு தூக்குதல் போட்டிகள் நேற்று (ஜூலை 31) நடைபெற்றன. பளு தூக்குதல் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார்.
ஒரே நாளில் 4 பதக்கம்:முன்னதாக, பளு தூக்குதல் ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவில் சங்கேத் சர்கர் வெள்ளியையும், 61 கிலோ எடைப்பிரிவில் குருராஜா பூஜாரி வெண்கலத்தையும் வென்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் முன்னணி பெற செய்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பளு தூக்குதல் மகளிர் 55 கிலோ எடைப்பிரிவில் பிந்த்யாராணி 202 கிலோ பளுவை தூக்கி (ஸ்னாட்ச் - 86 கி. + கிளீன் & ஜெர்க் 116 கி.) வெள்ளி வென்று இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.
இதன்மூலம், நேற்று ஒரே நாளில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என நான்கு பதக்கங்களை குவித்துள்ளது. இந்த நான்கும் பளு தூக்குதல் போட்டியில் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்றைய நாள் முடிவில், பதக்கப்பட்டியலில் இந்தியா 8ஆவது இடத்தில் உள்ளது. 13 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. மேலும், நியூசிலாந்து 2ஆம் இடத்திலும், தொடரை நடத்தும் இங்கிலாந்து 3ஆம் இடத்திலும் உள்ளன.
ஹாக்கி, பேட்மிண்டன் - இந்தியா அசத்தல்:மேலும், நேற்று இந்தியா - வேல்ஸ் நாடுகளுக்கு இடையில் மகளிர் ஹாக்கி நடைபெற்றது. இதில், இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'ஏ' பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், வந்தனா கத்தாரியா பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்தியாவுக்கு 2 கோல்களை அடித்து அசத்தினார்.