ஹாங்சோ :ஆசிய விளையாட்டு தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் கபடி போட்டியின் அரையிறுதி சுற்று நடைபெற்றது. அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கோதாவில் இறங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 61க்கு 14 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். முதல் பாதி முடிவில் இந்திய அணி 30க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தொடர்ந்து அதிரடி காட்டத் தொடங்கிய இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணியை பந்தாடினர். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர்கள் பவன் ஷெராவத், நவீன் குமார் ஆகியோரை தாண்டி பாகிஸ்தான் அணியால் மேற்கொண்டு புள்ளிகள் சேகரிக்க முடியவில்லை. இரண்டாவது பாதி முடிவில் இந்திய வீரர்கள் 61-க்கு 14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
அதேபோல் ஆடவருக்கான வில்வித்தையில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி, தென் கொரிய அணியை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே விரைவாக செயல்பட்டு புள்ளிகளை சேகரித்து வந்த தென் கொரிய வீரர்கள், இந்திய வீரர்களுக்கு கடும் சவால் அளித்தனர். இறுதியில் தென் கொரிய வீரர்கள் 5-க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் தங்கம் வென்றனர். சிறப்பாக விளையாடிய இந்தியாவின் அதானு தாஸ், தீரஜ் மற்றும் துஸர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
மகளிருக்கான, 62 கிலோ ப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். 62 கிலோ ப்ரீ ஸ்டைல் எடைப் பிரிவில் நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக், நடப்பு ஆசிய சாம்பியன் சீனாவின் லாங் ஜியாவை எதிர்கொண்டார்.
தனது அசாதரண கிடுக்குப்பிடி ஆட்டத்தால் சீன வீராங்கனையை நிலை குழையச் செய்த சோனம் மாலிக், இறுதியில் 7-க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க வேட்டை 90ஐ தாண்டியது. விரைவில் 100 பதக்கங்களை வென்று வரலாறுச் சாதனை என்ற மைல்கல்லை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது.
இதையும் படிங்க :India Vs Australia : மேட்ச் பார்க்க போறீங்களா! முதல்ல இதை படிச்சுட்டு போங்க! எவ்வளவு ரூல்சு?