உலகளவில் மிகப் பெரிய விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டுவருகிறது. கி.மு.வில் பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுவந்தாலும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (ஐ.ஒ.சி) 1896இல் இருந்துதான் நவீன ஒலிம்பிக் போட்டியின் வரலாறு தொடங்கியது. அன்றிலிருந்து 1920 வரை கோடைகால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஒன்றாகவே நடத்தப்பட்டுவந்தது. அதன்பின் 1924இல் இருந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைமுறைக்கு வந்தது வேறுகதை.
இதுவரை 31 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடந்துமுடிந்த நிலையில், 32ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவிருந்தது. ஆனால், கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரசால் உலகில் இதுவரை 17, 365 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.