கத்தார்: சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெறுகிறது. இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் கால்பந்து தொடர் நடைபெறாத நிலையில், முதல்முறையாக சர்வதேச கால்பந்து தொடரை நடத்தும் பெருமையை கத்தார் பெற்றுள்ளது.
நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஸ்பெயின், உருகுவே, இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், போர்ச்சுகல், குரோஷியா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட 32 அணிகள் களமிறங்க உள்ளன. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரும், ஈகுவடார் அணிகளும் மோத உள்ளன.
முன்னதாக இந்திய நேரப்படி, இன்று இரவு 7:30 மணிக்குத் தொடக்க விழா கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்வுகளுடன் விழா நடைபெற உள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் பகுதியில் ஏறத்தாழ 60 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் அல் பையத் மைதானம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரபலமான தென்கொரிய இசைக்குழு பி.டி.எஸ். (BTS) உள்பட பல்வேறு நாடுகளைச்சேர்ந்த இசை மற்றும் நடனக்கலைஞர்கள் தொடக்க விழாவில் கண்கவர் விருந்து அளிக்க உள்ளனர்.