உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் தோஹா நகரில் நேற்று தொடங்கியது. இதில், மகளிர் பிரிவுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டூட்டி சந்த் உள்ளிட்ட 47 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
டூட்டி சந்த் சமீபத்தில் நபோலியில் நடைபெற்ற 100 மீட்டர் தனி நபருக்கான போட்டியில் 11.32 நொடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதேபோல், தேசிய அளவிலான போட்டியிலும் 100 மீட்டர் பிரிவில் 11.24 நொடிகளில் இலக்கை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
இதனால், இந்தத் தொடரிலும் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படடது. இதையடுத்து, ஏழு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் டூட்டி சந்த் ஆறாவது சுற்றில் கலந்துகொண்டார். இப்போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் இலக்கை 11.30 வினாடிகளில் கடக்கும் வீராங்கனைகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவர்.
இந்நிலையில், டூட்டி சந்த் இலக்கை 11.48 வினாடிகளில் கடந்து ஏழாவது இடத்தை மட்டுமே பிடித்ததால், தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். ஒட்டுமொத்த 47 போட்டியாளர்களின் இலக்கு நேரத்தை கணிக்கிடும்போது அவர் 37ஆவது இடத்தில் உள்ளார். இந்தத் தொடரில் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த டூட்டி சந்த் தோல்வி அடைந்துள்ளது, தடகள ரசிகர்களை வருத்ததில் ஆழ்த்தியுள்ளது.