சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் ஆக்டோபர் 6ஆம் தேதிவரை தோஹாவில் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்கும் 25 வீரர்கள் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் இடம்பெற்றுள்ளார்.
இவர், சமீபத்தில் நபோலியில் நடைபெற்ற 100 மீட்டர் தனி நபருக்கான போட்டியில் 11.32 நொடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதேபோல், தேசிய அளவிலான போட்டியிலும் 100 மீட்டர் பிரிவில் 11.24 நொடிகளில் இலக்கை கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதனால், இம்முறை உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் இவர் தங்கப் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அணியில் தேர்வானது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கான 25 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் நான் தேர்வாகியுள்ளேன். இந்தத் தொடரில் எனக்கு வேகமும் அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும் என வாழ்த்துங்கள் என பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, ஒரே பாலினத்தை சேர்ந்தவரை காதலிப்பதாக டூட்டி சந்த் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுகுறித்து அவர் கூறுகையில், "இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் இந்த விவகாரம் சரியாகிவிடும். இது என் ஆட்டத்திறனை பாதிக்காது.
சர்வதேச அரங்கில் ஏராளமான தடகள வீராங்கனைகள்/ வீரர்கள் ஒரே பாலின உறவில்தான் உள்ளனர். இதனால், பிரச்னைகள் வந்தாலும், அது எதிர்காலத்தில் சரியாகிவிடும். எனது கவனம் எல்லாம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் தகுதி பெறவேண்டும் என்பதில்தான் உள்ளது. அதற்காக, நான் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.