கஜகஸ்தான் நாட்டின் நூர் சுல்தான் நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்று விளையாடிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (53 கிலோ), வீரர் பஜ்ரங் புனியா (65 கிலோ), ரவி குமார் (57 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர். இதன்மூலம், இவர்கள் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியையும் பெற்றனர்.
இந்நிலையில், இந்தத் தொடரில், 86 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா பங்கேற்றார். இவர் காலிறுதிப் போட்டியில் கொலம்பிய வீரர் மென்டேஸுடன் (Mendez) மோதினார். முதலில் 3-6 என்ற கணக்கில் பின்தங்கிய தீபக் புனியா, அடுத்தப் பாதியில் சிறப்பாக செயல்பட்டு 7-6 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நான்காவது இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமை பெற்றார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அவர் சுவிட்சர்லாந்தின் ஸ்டீஃபன் ரைய்ச்முத்துவை (Stefen Reichmuth) எதிர்கொண்டார். இதில், ஆதிக்கம் செலுத்திய தீபக் புனியா 8-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். இறுதிச் சுற்றில் அவர் ஈரான் வீரர் ஹசான் யாஸ்டனிசராட்டியுடன் பலப்பரீட்சை (Hassan Yazdanicharati) நடத்தவுள்ளார்.