விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு இன்று (ஆகஸ்ட் 21) அறிவித்துள்ளது. இதில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரராக இருந்து, பல்வேறு பதக்கங்களை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்றதுடன், பயிற்சியாளராகவும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி வீரர்களையும் உருவாக்கிய பயிற்சியாளர் மதுரை ரஞ்சித்குமாருக்கு, மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு ரஞ்சித் குமார் வழங்கிய பிரத்யேக நேர்காணலில், “மிகக் கடுமையான பாதைகளை கடந்து வந்து இந்த சாதனையை படைத்திருக்கிறேன் எனும்போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த விருதுக்கு என்னை தேர்வு செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய தேசத்திற்காக 26 முறை உலக அளவில் பங்கேற்று, குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளேன். இதுவரை சர்வதேச அளவில் 22 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளேன்.