பர்மிங்ஹாம்: 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இதில், ஆடவர் பளு தூக்குதலில் 81 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அஜய் சிங் பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் 143 கிலோ பளுவைத் தூக்கிய அவர், கிளீன் & ஜெர்க் பிரிவில் 176 கிலோ பளுவைத் தூக்கினார். அவரால் கிளீன் & ஜெர்க் பிரிவில் 180 கி. பளுவைத் தூக்க இயலாததால், மொத்தம் 319 கிலோவுடன் (143+176) ஆட்டத்தை நிறைவு செய்தார். இதன்மூலம், நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.
இதே போட்டியில், இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே 325 கிலோ பளுவை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றது மட்டுமில்லாமல், காமன்வெல்த் தொடரில் அதிக பளுவை தூக்கி (இரு பிரிவையும் சேர்த்து) புது சாதனையையும் படைத்தார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கையில் ப்ரூஸ் 323 கிலோவுடன் வெள்ளியையும் கனடாவின் நிக்கோலஸ் வச்சோன் 320 கிலோவுடன் வெண்கலத்தையும் தட்டிச்சென்றனர்.