பர்மிங்ஹாம்: 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இத்தொடரின் ஐந்தாம் நாளான நேற்று (ஆக. 2) இந்தியா சார்பில் லான் பால், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், வட்டு எறிதல், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
லான் பால்: காமன்வெல்த் தொடர் வரலாற்றில் இந்தியா முதன்முறையாக மகளிர் லான் பால் விளையாட்டின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது. இப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை நடத்தியது.
இதில், இந்திய வீராங்கனைகள் ரூபா ராணி டிர்கி, நயன்மோனி சைகியா, லவ்லி சௌபே மற்றும் பிங்கி சிங் ஆகியோர் விளையாடினர். போட்டி முடிவில், இந்தியா 17-10 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கதை வென்றது. லான் பால் விளையாட்டில், இந்தியாவின் முதல் பதக்கமாக தங்கம் கிடைத்துள்ளது.
டேபிள் டென்னிஸ்: இந்தியா இத்தொடரின் ஆரம்பத்தில் இருந்தே டேபிள் டென்னிஸ் போட்டியில் கடும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. நேற்று நடைபெற்ற ஆடவர் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, சிங்கப்பூரை சந்தித்தது. இதில், இந்தியா 3-1 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி 5ஆவது தங்கத்தை வென்றது.